செங்கொடி மூட்டிய தீ

Guest Post by PREMA REVATHI
An English translation, with a background note, is available here.

மனித மனம் விசித்திரமானது. செங்கொடியின் மரணச்செய்தியை கேட்டதும் ஆறாத இயலாமையின் இருள் சூழ்ந்துகொண்டுவிட்ட மனதில் எப்போதொ ஒரு காலத்தில் மனதில் ஆழப்பதிந்துபோன

“ இந்த பூமியின் தேசங்களில்

ஒளி வீசுக செங்கொடியே…”

என்ற பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் அலையாடியது.

புரட்சிகர போராட்டத்தால் இந்த பூமியையே மாற்றிவிடும் ஒரு பெருங்கனவு இன்று முள்ளாய் உறுத்தும் ஒரு பழங்கனவாய் விடைகள் இல்லாத திசைவழிகள் இல்லாத நம்பிக்கைதரும் தலைமைகள் இல்லாத இத்தனிமையான அரசியல் இரவில் துறுத்திக்கொண்டிருக்கும் வேதனை முகத்தில் அறைகிறது.

ஆயிரமாயிரம் வார்த்தைகள் செங்கொடி பற்றி எழுதப்பட்டுவிட்ட, எழுதப்பட்டுகொண்டிருக்கும் இக்கணத்தில் நெஞ்சுருக்கும் இந்த இன்மையும் புகைப்படத்தில் தீர்க்கமாயொளிர்ந்து கொண்டிருக்கும் அவள் விழிகள் கேட்கும் கேள்விகளும் அலைகழித்துக் கொண்டே இருக்கின்றன.

தொப்புள்கொடி இரத்தபாசம் என்ற சொல்லாடல்களால் நிறைந்து போயுள்ள தமிழ்தேசிய போராட்டச்சூழலில் செங்கொடியை தொப்புள்கொடியின்றி தாய்ப்பாலின் இரத்தமின்றி பெரும் மனிதநேய அன்பில் உலகை மாற்றும் போராட்ட அறத்தோடு வளர்த்து ஆளாக்கி அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து செதுக்கி இன்று பெறாத தம் அன்பு மகளை தீக்கிரையாய் கொடுத்துவிட்டு தணியாத வேதனையோடு நிற்கும் தோழர்கள் மகேஷிற்கும், ஜெஸ்ஸிக்கும் மற்ற மக்கள் மன்ற தோழர்களுக்கும் ஆறுதல் சொல்லுதற்கு வார்த்தைகள் ஏதுமில்லை. இந்தத் துயரைக் கடக்கும் சக்தியை நீங்கள் ஏற்றுக்கொண்ட அரசியலும் போராட்டமும் வாழ்க்கையும் உங்களைச் சுற்றி இருக்கும் அந்த குழந்தைகளும் மட்டுமே உங்களுக்கு தரமுடியும் என நம்புகிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு செங்கொடியின் இறுதி ஊர்வலத்திலும், இரங்கல் கூட்டத்திலும் நான் ஒன்றை பார்த்தேன். பற்பல பிரிவுகளான தமிழ் தேசிய அமைப்புகள், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் ஒரே இடத்தில் கூடியிருந்ததுதான் அது.

இப்படி ஒரு சாவு தேவைப்பட்டிருக்கிறது ஒன்றுகூட. இப்படி ஒரு கோரிக்கை தேவைப்பட்டிருக்கிறது நமக்கு காஞ்சி மக்கள் மன்றத்தின் வாயிலில் நுழைய. செங்கொடியை விதைத்தாகிவிட்டது. இனி இப்படியொரு சந்திப்பு நிகழுமா எனத்தெரியவில்லை.

தமிழ்தேசியவாதிகளுக்கு:

 செங்கொடி இருளர் இனத்தில் பிறந்தவள். இருளர் என்றதும் உங்களுக்கு உடனே பிடிபடுமாவென தெரியவில்லை. தமிழகத்தின் ஆதிகுடிகளான இருளர்கள் அடிப்படை உரிமைகளைக்கூட இன்னும் நெடும்போராட்டங்களால் மட்டுமே பெற முயற்சித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள்.

இருளர் மட்டுமில்லை இன்னும் பெரும்பான்மையான தமிழகப் பழங்குடிகள் மற்றும் நாடோடிகளின் நிலை இதுதான். தான் பழங்குடிதான் என்பதை நிறுவ சாதிச்சான்றிதழ் பெறும் போராட்டத்தை பல பத்தாண்டுகளாய் தமிழகப்பழங்குடிகள் நடத்தி வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்ட உதவிகள் என எதைப்பெறுவதற்கும் தேவைப்படும் சாதிச்சான்றிதழ்களை இவர்கள் பெற தோழர்.கல்யாணி, காஞ்சி மக்கள் மன்றம் இன்னும் சில அமைப்புகளும் நிறுவனங்களும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்ற ஏதாவது ஒரு போராட்டம், கோரிக்கை, தீர்மானம் தமிழ் தேசிய அரசியலில் முக்கியத்துவமாக கருதப்பட்டுள்ளதா? பெரியார் திராவிடர் கழகத்தைத்தவிர்த்த பிற தமிழ் தேசிய அமைப்புகள் இதை சிந்தித்து பார்க்கும்படி செங்கொடி தன் மரணத்தால் நம்மைக் கேட்கிறாள்.

ஒரு தலித் பெண் தன் சமூகத்திற்காக தன் பாலினத்துக்காக ஒட்டுமொத்த உலகின் விடுதலைக்காக போராடும் தெளிவும் திறனும் கொண்ட ஒரு போராளி தமிழ் தேசிய போரட்டமாக சித்தரிக்கப்படும் ஒரு பிரச்சினையில் தன் உயிரை விட்டிருக்கிறாள். அவர் பிறந்த சமூகம், அவர்களைபோன்ற ஏராளம் பழங்குடிகள், சாதி என்னும் வன்முறையால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் தலித்துக்கள், ஆணாதிக்க – அடக்குமுறையால், பண்பாட்டால், மொழியால் – கட்டுண்டு சிதைக்கப்படும் தம் ஆளுமைகளை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்கும் பெண்கள் – இவர்களை பொருட்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீகள்?

உணர்ச்சிப்பெருக்கான உங்கள் சொல்லாடல்களில் தெறிக்கும் இவர்கள் குறித்த அலட்சியங்களையும் அறியாமைகளையும் செங்கொடி மூட்டிய தீ எரிக்குமா? எந்த விடுதலையும் எல்லா மக்களினதும் எல்லா பகுபாடுகளையும் தகர்த்தே பெறமுடியும் என்ற உண்மை உன்களுக்கு உரைக்குமா?

தலித் அமைப்புகளுக்கு:

இழப்பதற்கு உண்மையிலேயே ஏதுமில்லாத, அடங்க மறுக்க அத்து மீற, திருப்பி அடிக்க என எல்லாவகையிலும் புரட்சிகர தன்மையோடு புறநிலைகளும் அகநிலைகளும் ஒன்றினைந்த புள்ளியில் வீறுகொண்டு எழுந்து ஒரு மாற்று பண்பாட்டை மொழியை சமூகத்தை படைக்கும் பேரெழுச்சியாய் தொடர்ந்த தலித் அரசியல் இன்று எதை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது?

சாமனியர்களின் வீரத்தால் தியாகத்தால் அடக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டால் ஒரு பெரும் அலையென எழுந்த தலித் அரசியல் வரலாறு இன்று முன்வைக்கும் திட்டம் என்ன?

பிரச்சினைகளுக்கு எதிரான தீவிர போரட்டங்களை தவிர்த்துவிட்டு வெறும் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற்று என்ன சாதித்துவிடமுடியும் என்பதை வரலாறு நமக்கு ஏற்கெனவெ காட்டிவிட்டது. மீண்டும் மீண்டும் காட்டப்போகிறது.

அருந்ததியர்களின் பிரச்சினையிலேயே இன்னும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாதபோது பழங்குடிகள், நாடோடிகள், பெண்கள் பற்றி என்ன செய்யப்போகிறோம்?

ஆட்சிகள் மாற மாறும் கொள்கைகள், சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள், நிதமும் நிகழும் சாதீய வன்முறைகள் குறித்த பாராமுகம் நம்மை காலத்தின் முட்டுச்சந்துக்குள் நெருக்கித்தள்ளிக்கொண்டிருக்கிறது.

சாதியால் வலிமையாக கட்டப்பட்டிருக்கும் இச்சமூகத்தில் தலித்துகள்தான் முழுமையான ஒரு சமூக விடுதலையை வென்றெடுக்கும் போரை தலைமைதாங்க முடியும். அந்தப்போர் நாடாளுமன்றத்தின் திருத்தப்பட்ட தோட்டங்களிலோ சட்டமன்றங்களின் பாதுகாப்பான கூடங்களிலோ மட்டும் நடக்க முடியாது என்பதை அம்பேத்கர் நமக்கு கூறி பல வருடங்கள் ஆகிறது.

செங்கொடி அப்படி ஒரு போரின் அறிகுறி தெரியாமல் நீளும் பொழுதொன்றில் தன்னை களப்பலியாக கொடுத்துவிட்டாள். போரைத்தொடர நாம் என்ன செய்யப்போகிறோம்?

இடதுசாரிகளுக்கு :

செங்கொடி பிடித்து பூமியின் தெருக்களில் விடுதலையை பாடிய நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நம் கண்முன்னே எரிந்து விழுந்திருக்கிறாள் செங்கோடி. நம் பதாகை எரிந்துகொண்டிருக்கிறது தோழர்களே! இன்னும் இன்னும் எத்தனைக்காலம் நடைமுறைச்சிக்கல்கள், சட்டப்பிரச்சினைகள், இயக்கத்தைப்பாதுகாப்பது என்ற உலுத்துப்போன பேச்சுகளால் நாம் தீவிர போராட்டகுணம் கொண்டு எழும் ஒரு இளையதலைமுறையின் தேடல்களை ஏமாற்றங்களை பார்வையாளர்களாய் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறோம்?

வெறும் உனர்ச்சிகளால் விடுதலையை வென்றெடுக்க முடியாது. உண்மை. ஆனால் சிறுதுளி உணர்ச்சியும் அற்ற ஒரு அமைப்பு எதையுமே வென்றெடுக்க முடியாது. விடுதலையை விடுங்கள்.

இறையான்மையின் காவலர்களாய் சட்டத்தின் அடிவருடிகளாய் வாழ சி.பி.எம்மிற்கு வழிகாட்டுவது யார்? நிச்சயம் காரல் மார்க்ஸாக இருக்கமுடியாது.

தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் அரசியலை, மொழி பண்பாடு பாற்பட்ட ஒரு புரட்சிகர அரசியலை இடதுசாரிக்கட்சிகள் கையிலெடுக்காததும் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் வறட்சிக்கும் அதனூடாய் நிகழ்ந்துவரும் செங்கொடி போன்றோரின் சாவிற்கும் ஒரு முக்கிய காரணம். அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது ஒரு பதில் சொல்வது புரட்சிகர அரசியல் இல்லை. ஏன் அது ஒரு அரசியலே இல்லை.

மார்க்ஸியத்தின் மாவோயிஸத்தின் பாற்பட்டு இயங்கும் பல குழுக்கள் இனப்பிரச்சினை, சாதி ஒழிப்பு, பெண்ணியம் குறித்த முற்போக்கான வறையறைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒட்டமுடியாத கண்ணாடியின் துண்டுகளாய்பிளவுபட்டுக்கொண்டேயும் இருக்கிறார்கள். அரசியல் கொள்கையால் பிளவு, ஆளுமைகளால் பிளவு, திட்டத்தால் பிளவு… இன்னும் இன்னும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு புரியவே முடியாத பல காரணங்களால் பிளவுகள். வர்க்கம், சாதி, பாலினம், இனம் சார்ந்த பல்முனைத்தாக்குதலில் கிடக்கும் ஒரு சமூகத்தில் இத்தனையையும் மீறி நாம் வெட்டி பிளந்துகொண்டிருக்கிறோம் நம் ஆற்றல்களை, போராட்டச்சக்தியினை.

ஒருபுறம் வயதானவர்களின் அச்சத்தால் இருப்பதை தக்கவைத்துக்கொள்ளும் பிற்போக்குத்தனத்தால் – இன்னொருபுறம் இளைஞர்களின் எல்லா நல்லது கெட்டதும் எங்களுக்குத்தான் தெரியும் என்ற எவருக்கும் புரியாத பேச்சுக்களால் நாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறோம்.

பிளவுகள் குறித்த இக்கேள்விகள் பெண்னியவாதிகளுக்கும் பொருந்தும். தேசிய அரசியலையும் அதன் தவிர்க்கமுடியாத அண்ணணாய் வரும் தமிழ்க்கற்பு, தாய்ப்பாசம் அதற்கு தீனியாக தேவைப்படும் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்னுடல் எல்லாவற்றின் மீதும் அசூயை எனக்கும் இருக்கிறது. ஆனால் பல்லாயிரம் இளைஞர்களை, இளைஞிகளை இப்போராட்டம் ஈர்ப்பதன் காரணத்தை நாம் சாதாரணமாகத்தள்ளிவிடமுடியாது. அதனோடான உரையாடல் சங்கடமானதொன்றாய் இருப்பினும் நிகழத்தப்படவேண்டும். பல்வேறு நேரங்களில் உலகில் எங்கெங்கோ நிகழும் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்ளும் நாம், நம்மைச்சுற்றி நடக்கும் நம்மோடு வாழும் ஏராளம் பேரை அசைக்கும் கேள்விகளை தவிர்த்துவிடுகிறோம்.

                                                                                 …

இவையெல்லாம் ஏதோ எல்லாம் எனக்குத்தெரியும் என்ற ஆணவத்தால் எழுதவில்லை. எனக்கும் இப்படியான கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. ஒருவேளை இது இப்படியிருந்திருந்தால் செங்கொடி இறந்திருக்க மாட்டளோ, நம் போராட்டகளம் தற்கொலைக்களமாக மாறவேண்டிய அவலம் நேர்ந்திருக்காதோ என்ற ஒரு தார்மீக உணர்வால் எழுந்த கேள்விகள் கருத்துக்கள் இவை.

செங்கொடி என்னுள் ஏராளம் கேள்விகளை எழுப்பி என்னை விழித்தெழச்செய்திருக்கிறாள். ஆனால், இதை வெறும் வீரம் என்ற தட்டையான வறையறைக்குள் என்னால் அடக்கமுடியவில்லை. தாங்கமுடியாத துக்கம் என் நெஞ்சை அடைக்கிறது. துயறுறவும், கண்ணீர் மல்கவும் முடியாத வீர அரசியலாக மட்டும் இது மாற்றப்படக்கூடாது. அன்பும் தைரியமும் தியாகமும் வீரமும் வேட்கையும் கண்ணீரும் உவகையும் நேசமும் இசையும் கையறுநிலையும் பாட்டும் போராட்டமும் நடனமும் என எல்லாமுமாய் நம் இயக்கம் இருக்கவேண்டும்.

மிகவும் வறுமையான சூழலில் பிறந்து, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாய் வளர்ந்து எட்டு வயதில் குழந்தைமையை கலைத்துபோடும் குடும்பச்சிக்கலில் இருந்து தன்னை தானே மீட்டுக்கொண்டு மக்கள் மன்றம் என்ற ஒற்ற கருத்தினர் வாழும் கம்யூனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ்வது என்பது பலநிலைகளில் பல போராட்டங்களை மனதாலும் வாழ்வாலும் சந்திக்கவைக்கக்கூடிய ஒரு பெறும்பயணம். அப்படியான சூழ்நிலைகளை நம்மில் பெரும்பாலோரால் கற்பனை கூட செய்யமுடியாது. செங்கொடி போன்றோரின் போராட்டம் பெரும்பான்மையான நம்மின் போராட்டங்களைக்காட்டிலும் வலிநிறைந்தது ஏனெனில் அவர்கள் அதற்கு கொடுக்கும் விலை மிகப்பெரியது.  இவ்வளவும் அவள் செய்தபின்னரும் அவள் பெற்ற அயற்ச்சி, “தொடர்ந்து இப்படி அடையாள போராட்டங்களை நடத்தி என்ன பயன்” என்ற அவளது கேள்வி மரத்துப்போய்க்கொண்டிருக்கும் நம் மனங்களின் மீதான சாட்டையடி.

அவளுடைய தியாகம் என்னை சுட்டுக்கொண்டிருக்கும் அதே வேளையில், தெளிவாய் தோன்றும் உனர்வு இதுதான். செங்கொடி இறந்திருக்ககூடாது. இளைஞர்கள் தற்கொலைகளால் தம் கோரிக்கைகளை வெல்லவேண்டிய நிலை தொடரக்கூடாது. இது ஒரு உணர்வுசார்ந்த பிரச்சினையல்ல. நம்முன் நிற்கும் அரசியல் சவால்.

–     செங்கொடி குறித்த எனக்கான பதிவாய் மட்டும் எழுதப்பட்ட இக்குறிப்பை வாசித்த தோழர்கள்  வ.கீதா, அ.மங்கை, அ. பொன்னி ஆகியோரும் இதில் உள்ள கேள்விகள் விவாதிக்கப்படவேண்டியவை என கூறியதாலும் இதை பொதுவெளியில் வைக்கிறோம்.

8 thoughts on “செங்கொடி மூட்டிய தீ”

  1. KAFILA ஒரு தமிழ் உரையாடலுக்கு இடமளித்திருப்பது பாராட்டத்தகுந்தது. பிரேமா ரேவதியின் கேள்விகளும்,உணர்வுகளும் முக்கியமானவை, மதிப்பதற்குரியவை என்பதைத் தவிர வேறெதுவும் உடனே சொல்லத் தோன்றவில்லை. அரசியல் என்பதை தொடர்ந்து அர்த்தப்படுத்திக்கொள்ளும் தேவை அத்தியாவசியமானது.

    Like

  2. //ஆட்சிகள் மாற மாறும் கொள்கைகள், சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள், நிதமும் நிகழும் சாதீய வன்முறைகள் குறித்த பாராமுகம் நம்மை காலத்தின் முட்டுச்சந்துக்குள் நெருக்கித்தள்ளிக்கொண்டிருக்கிறது//
    பிரேமா ரேவதி அவர்கள் முன் வைக்கும் கேள்விகள் இன்றைய சூழலில் மிக முக்கியமானவை. இவற்றை கணக்கில் கொண்டு நமது நிலைப்பாடுகள், செயற்பாடுகள் பற்றி மீளாய்வையும், இலக்குகள் பற்றிய தெளிவையும், தொடர்ந்த செயற்பாடுகளையும் கேட்டு நிற்கிறது காலம்!

    Like

  3. कितना दुखद है किसी भाषा को ना पढ़ पाना. लेकिन काफ़िला को बधाई इस आईने को सामने रखने के लिये.

    Like

    1. the author has brought out the main issues and questioned rightly all the groups involved
      i amdisturbed by the questions raised as they are powerful and correct.I hope the people in different representing different groups will think and take corrective steps..

      Like

Leave a reply to nagal Cancel reply